கட்டுரை

மாநிலங்களவைத் தேர்தல்: யார் சிறந்த ராஜதந்திரி?

மதிமலர்

ஒரு ராஜ்யசபா சீட்டைப்  பெறுவதற்கு திமுகவும் தேமுதிகவும் போட்டா போட்டி போட்டது கடந்த பத்துநாட்களுக்கும் மேலாக தமிழக அரசியல் வட்டாரத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டது. 23 இடங்களை மட்டும் வைத்திருந்த திமுகவுக்கு அதிமுக ஒருவிதத்தில் தேமுதிகவைப் பலவீனப்படுத்தியதன் மூலம் உதவி செய்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

அதிமுகவைப் பொறுத்தவரை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று ஜெயலலிதா கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பேசிவந்தார். தேர்தலுடன் கூட்டணி முடிந்துவிட்டது. இனி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. தனித்து நின்றே 40 தொகுதிகளையும் ஜெயிப்போம் என்று கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றி வந்தார். அவர்களும் நாட்டை ஆளப்போகும் கட்சியின் உறுப்பினர்கள் என்ற உற்சாகத்திலேயே வலம் வந்தனர். ஆனால் தேர்தல் கணக்குகள் வேறானவை என்பது அரசியலில் இருப்பவர்களுக்குத் தெரியும். இதில் ஜெயலலிதாவும் சளைத்தவர் அல்ல.  அது இந்த ராஜ்யசபா தேர்தலிலும் நன்றாகவே எதிரொலித்தது.

ஆரம்பத்தில் சிபிஐயின் தா.பாண்டியனுக்கு ஜெயலலிதா ஒரு சீட் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் சிபிஐயின் டெல்லி தலைமை அந்த சீட் டி.ராஜாவுக்கு மீண்டும் தரப்படவேண்டும் என்று சொல்லிவிட்டது. அத்துடன் தங்கள் கட்சிக்கு யாருக்கு சீட் தரவேண்டும் என்று தாங்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் உதார்விட்டார்கள்.

ஜெ. காலியாக இருந்த ஆறு சீட்டுகளில் தங்களால் உறுதியாக வெல்ல முடிந்த நான்கு இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தியதுடன் ஐந்தாவதாகவும் ஒரு வேட்பாளரையும் அமைதியாக நிறுத்திவிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் டெல்லிக்கு வந்த ஜெவை சந்தித்து தங்களுக்கு ஓர் இடத்துக்காகப் பேசினார்கள். ஆனால் நீங்கள் தாராளமாகப் போட்டிபோடுங்கள்; வெற்றிக்கு வாழ்த்துக்கள்! என்று மிகவும் மென்மையாகப் பேசி அனுப்பிவிட்டார்.

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன்போல(இதையே எவ்வளவு காலத்துக்கு எழுதுவீங்கப்பா?) சிபிஐ தலைவர்கள் சென்னைக்கு வந்து டி.ராஜாவை வேட்பாளராக அறிவித்தார்கள். மீண்டும் அவர்கள் ஜெ.வை சந்தித்து ஆதரவு கேட்க, பிழைத்துப் போங்கள் என்கிற ரீதியில் தனது ஐந்தாவது வேட்பாளரை வாபஸ் வாங்கி சிபிஎம்(10), சிபிஐ (8), பார்வர்ட் பிளாக்(1), அதிமுகவில் மீதி இருந்த வாக்குகள் (15) எனச் சேர்த்து 34 வாக்குகள் ராஜாவுக்குக் கிடைக்க வழி செய்தார்.

இதன்மூலம் ஜெ. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கத் தயாராகவே உள்ளார் என்பதை வெளிப்படுத்தியிருப்பதாகவே பார்க்கவேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.

“ தனியாக நின்று ஜெயிப்பதெல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் செல்லாது. தேமுதிகவை கழற்றி விட்டாகிவிட்டது. அதனுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை. பாமகவின் தலைவர் ராமதாசை சிறையில் போட்டதுடன் அதன் நிர்வாகிகள் பலரை கடுமையான பிரிவுகளில் சிறையில் அடைத்து- விட்டதால் அந்த கட்சியுடனான கூட்டணியும் இல்லை. மீதி இருக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளாவது தன்னுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் தேர்தல் வேலை பார்க்கவும் பிரச்சாரம் செய்யவும் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது அதிமுக. அதுதான் கடைசி நேரத்தில் டி.ராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளது” என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

திமுக முகாமில் சலிப்பும் மகிழ்ச்சியுமாக கடந்து பத்து நாட்கள் கடந்தன. கனிமொழியை மீண்டும்  ஸ்டாலின் ஆசிர்வாதத்துடன் மாநிலங்களவை எம்பியாக அறிவித்தவுடனே திமுக எப்படியும் அவரை டெல்லிக்கு அனுப்பவேண்டும் என்று களத்தில் குதித்தது. காங்கிரசிடம் ஆதரவு கேட்பதை கடைசியில் வைத்துக் கொள்ளலாம் என்று சிபிஎம், தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை முதலில் அணுகியது. சிபிஎம் ராஜாவுக்கு ஆதரவு என்று கழற்றிக் கொண்டது. தேமுதிக ‘நாங்களும் நிப்பமுல்ல’ என்று முண்டா தட்டியது. இடையில் ஆறுதல் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய இருகட்சிகளும் திமுக பக்கம் ஆதரவுக்கு வந்தன. அதிமுகவுக்கு அவர்கள் ஆதரவு தேவையில்லை; அத்துடன் ஏன் தங்கள் வாக்குகளை வீணடிப்பானேன் என்று பல கணக்குகளைப் போட்டு அவர்கள் இந்த முடிவுகளை எடுத்தனர். பாமக தான் கடைசியில் திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. யாருக்கும் ஆதரவில்லை என்று அது புறக்கணித்துவிட்டது. ஸ்டாலின் நேரடியாக அன்புமணியைச் சந்தித்து ஆதரவு கேட்டும் பலன் இல்லை.

சரி இனிமேல் காத்திருந்தால் ஆபத்துதான் என்று காங்கிரசை டெல்லியில் மடக்கிப் போட திமுக முடிவு செய்தது. எத்தனை ஆண்டுகளாக அரசியல் செய்கிறோம்? நேற்று வந்த தேமுதிக எங்களுக்குத் தண்ணி காட்டுவதை அனுமதிக்க முடியுமா? இதுதான் காங்கிரசின் தேமுதிக ஆதரவு நிலையை உடைத்ததன் மூலம் திமுக சொல்லியிருக்கும் சேதி. இப்போது காங்கிரசின் ஆதரவு திமுகவின் மாநிலங்களவை எம்பியாக கனிமொழிக்கு கிடைத்திருக்கிறது.  காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஈழப்பிரச்னையைக் காரணம் காட்டி திமுக வெளியேறி நான்கு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் அதே கட்சியிடம் ஆதரவு பெற்று கனிமொழியை மீண்டும் ஜெயிக்க வைத்திருக்கிறது திமுக. இதைத் தான் காலத்தின் கட்டாயம் என்று சொல்லவேண்டும். ஆனால் வாய்ப்புகள் இல்லாத நிலையில் வேறு எதைத்தான் திமுக செய்திருக்க முடியும்?

இதில் தேமுதிக என்ன செய்கிறது என்றே புரியவில்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். தேமுதிக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக சேர்ந்திருந்தால் இத்தேர்தலில் இரண்டு எம்பிகளை அதிமுக துணையில்லாமல் அனுப்பி இருக்கமுடியும். வாரம் ஒரு எம்.எல்.ஏ என்கிற வகையில் தன் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிற அதிமுகவை தனிமைப் படுத்த முடிந்திருக்கும். ஆனால் தேமுதிக வெற்றி என்பது அவ்வளவு எளிதல்ல என்று தெரிந்ததனால்தான் எல்.கே.சுதீஷுக்குப் பதிலாக இளங்கோவனை நிறுத்தி குட்டையைக் குழப்பியது.

அத்துடன் போன குடியரசுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மாட்டோம் என்று புறக்கணித்துவிட்டு இப்போது தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் வீட்டுக் கதவைத் தட்டினால் என்ன பலன் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.

திராவிடக் கட்சிகளே வேண்டாம் என்றிருக்கும் பாமகவிடம் ஆதரவு கேட்டது, அதுபோல திமுக பக்கம் வரவே மாட்டோம் என்று அடம்பிடிக்கும் தேமுதிகவை நம்பியது, ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் மேல் பழியைப் போட்டு தப்பிக்க முயன்றிருந்தாலும் அதே கட்சியிடம் மீண்டும் ஆதரவுக்கு பழி கிடந்தது என்று திமுகவுக்கு இந்த மாநிலங்களவைத்  தேர்தல் கஷ்டத் தேர்தல்தான்! கனிமொழியைப் பொறுத்தவரை டெல்லிக்கு மீண்டும் செல்கிறார்!  அவரது அரசியல் எதிர்காலம் இப்போதைக்கு பாதுகாப்பாக உள்ளது!

ஜூலை, 2013.